Sulo

Sulo

Share

தமிழ் கவி

15/02/2026

அன்பே ஒன்று சொல்லவா?

காற்று வீசும் வேளையில்
கடற்கரையில் கதை பேசனும்
அக்கம் பக்கம் பார்த்து
நீயும் முத்த மழை பொழியனும்

சின்ன இடை தீண்ட
நானம் எட்டி பார்க்கனும்
மெல்ல மெல்ல தொட
என் தேகம் எங்கும் கூசனும்

தினம் ஒரு இடம் உன்னுடன்
சேர்ந்தே நடை போடனும்
நெஞ்சோடு உன் கையை
அணைத்தபடி வீதி உலா போகனும்

என் ஆசை எல்லாம் கேட்டு கேட்டு
உன் ஆசை நீயும் சொல்லனும்
ஆயுளுக்கும் இப்படித்தான் இந்த
காதல் கதை வளரனும்

~©️Sulo ~
15/02/2026

16/10/2025

கண்ணில் கத்தி வைச்சி
பாவி நெஞ்ச நீயும் கிழிச்சிப்புட்ட

சொல்லில் அம்பு விட்டு
ஆள தள்ளி மெல்ல சரிச்சிபுட்ட

சிரிச்ச சிரிப்புல நேக்கா
சில்லறைய தூக்கி சிதறவிட்ட

கட்டழக காட்டி நைசா
கட்டுபட்டு பின்னே நடக்கவிட்ட

மந்திரிச்ச ஆடா நானும் மாறி
உன் பின்ன சுத்துறனே

இதுவும் போதாதுனு கண்ண சிமிட்டி
இன்னும் என்ன செய்ய காத்திருக்க

~ ©️ சுலோ ~
16/10/2025

07/10/2025

உன் உலோகக் குரல்
என் லோகம் மறக்கச் செய்கிறதே
எங்கிருந்து வாங்கி வந்தாய்
ஆளை மயக்க?

சிறுகச்சிறுக பேசி மெதுவாய்
உயிர் பருக நினைக்கிறாய்
யார் சொல்லி தந்த வித்தையிது
மனம் பறிக்க?

சற்று காக்க வைத்தாலும்
மிருதுவாய் என் உள்ளிரங்கி
பொழுதும் ஏன் தூண்டுகிறாய்
உனை நினைக்க?

~ ©️ சுலோ ~
07/10/2025

30/04/2025

நீ பார்ப்பதும் உன்னை நான் பார்ப்பதும்
நெஞ்சம் எதிர்பார்ப்பதும்
ஒன்றை தானா?
இது அதற்கு தானா?

நீ சிரிப்பதும் அதை நான் ரசிப்பதும்
தடம் புரள்வதும்
நெருங்கிட தானா?
இது திட்டம் தானா?

நீ எதிர்ப்பதும் உடன் நான் தவிப்பதும்
சேர்ந்து நடிப்பதும்
தெரிந்ததால் தானா?
இது ஜாடை தானா?

~ ©️சுலோ ~
30/04/2025

10/03/2025

பார்வையின் வீரியம்
பல வைற்றமினின் உற்சாகம்
தேடி வரும் காரணம்
புரிந்ததா இப்போது?

குரல் தரும் தைரியம்
ஒரு போருக்கு தயார் செய்யும்
அலைப்பேசி ஒலிப்பது
கேட்கலையா இன்னும்?

நீ தொடும் ஸ்பரிசம்
பற்றவைக்கும் மின்சாரம்
எட்டியே நிற்கிறேன்
விபரீதம் எதற்கு? 😉

~©️சுலோ ~
10/03/2025

11/12/2024

நீ வேண்டும்
என்னோடு என்றும்
சேர்ந்தாடு
நில்லாமல் நாளும்

தோள் சேர
ஏங்கிடும் மலரும்
கையோடு
கைகோர்த்திடு போதும்

கண் ஜாடை
காட்டியே நீயும்
உயிரோடு
கொழுத்தினாய் மேலும்

என்ன எல்லாம்
செய்வாய் மீண்டும்
என்னோடு
சேராமல் இன்னும்

~ ©️சுலோ ~
11/12/2024

14/09/2024

உனக்கே உனக்கென காத்திருப்பேன்
உயிர் போகும் நொடி வரை நானே
புரியும் நாள் வருமோ அன்று நான்
புதிதாய் மலர்வேனோ

தவியாய் தவித்தேன் தனியே
துணை ஆவாய் நீயே இங்கே
தொடும் தூரம் அருகே வருவாயோ
அந்நாள் உனக்குள் தொலைவேனோ

இப்படிக்கு,
உன் தேடலில் நான்!

- ©️சுலோ -
- 14/09/2024 -

21/02/2024

நெடுந்தூரம் நீயிருக்க உன்
நினைவோடு நானிருக்க
தொலைதூரம் நீ போனாலும்
தொலைந்திடாது உன் ஞாபகமே

துளிதூரம் நகர்ந்திட மாட்டேன்
தொடும்தூரம் அருகினில் வா
தொட்டாலும் விலகிட மாட்டேன்
துலாவுவது உன் விரலென்றால்

நீ வர காத்திருப்பேன்
நெருங்கியணைக்க பார்த்திருப்பேன்
உனக்காக பூத்திருப்பேன்
ஒரு முத்தம் கொடுத்திட ஓடோடி வா

~©️சுலோ~
21/02/2024

16/02/2024

தினம் உன் தரிசனம் காண
கோயிலென ஓடி வந்தேன்
முப்பொழுதும் உனை காணும்
வரம் தர வேண்டுமே

உன் பூஜைக்கு பூசாரியானேன்
மலர் மாலை சூடியே
அர்ச்சனைக்கு தீபம் ஏந்த நீ
அமர்ந்திட வேண்டுமே

உள்ளம் குளிர குளிர
பால் அபிஷேகம் பண்ணிடவா
சிலிர்க்காத சிலை போல்
இருந்திட வேண்டுமே

தீண்டல் இன்றி பசியாற
நெய்வேத்தியம் செய்திடவா
காரமின்றி சுவைத்திட நீயும்
தயாராக வேண்டுமே

ஐம்புலனும் ஆட்டம் அடங்க
அங்கப் பிரதட்சனம் புரியவே
பூமாதேவியாய் என் மெய்
தாங்கிட வேண்டுமே

~ ©️சுலோ ~
16/02/2024

25/01/2024

தனித்திருக்கும் வேளையில்
தவிக்க வைக்கிறாய்
தடுமாறும் பொழுதுகளில்
தண்டிக்க நினைக்கிறாய்

தாமதமாய் புரிந்தாலும்
தாபத்தோடு காத்திருக்கிறேன்
தாங்கும் சக்தி தீறும்முன்னே
தாகம் தீர்க்க தவறாதே

தினம் கதைத்த பொழுதுகள்
தின்னமாய் அமர்ந்திருக்க
திரும்பி வருமோ அவையென
திக்கற்று வேய்கிறேனே

தீமூட்ட உலவிய விரல்கள்
தீண்டத்தகாததாய் விலகியதேன்
தீர்ந்து போன நேசத்தினாலா
தீய்ந்து போன காதலினாலா

துளியும் நகராது
துணையாய் நீயிரு போதும்
துஞ்சாது பின் வருவேன்
துயரிலும் கூட

தூண்டில் மீனாய் மாட்டிக்கொண்டேன்
தூக்கியெரிய நினைந்திடாதே
தூரமாய் இருந்தாலும்
தூரிகை நானுன் ஓவியத்திற்கு

தெரிந்து கொண்டேன்
தெளிவாய் நானும்
தென்னங்கீற்றாய் மடிகிறேன்
தெம்பின்றி காத்திருக்க

தேடியலைகிறேன் வருவாயென
தேம்பியழுகிறேன் காணாதுனை
தேக்கி வைக்கிறேன் என் பாசமதை
தேய்ந்தாலும் மங்காத வெண்ணிலவாய்

தைரியம் நீ கற்றுத்தந்தாயதனால்
தைத்துவைத்தேன் கிழிந்த இதயத்தை
தைலமிட்டு ஆற்றிடுவாய் ஆழ
தைத்துச்சென்ற காயமதை

தொட்டால் உடல் கூசிடும்
தொட்டாஞ்சுருங்கியல்லவே நான்
தொட தொட மருகினேன்
தொடர்வாய் நகர்வாய் மேலும்

தோள்சாய உனையன்றி
தோன்றக்கூடுமோ வேறொருவன்
தோல் சுருங்கி நின்றாலும்
தோதான தோழன் நீதானே

தௌவாரிகனை கடந்து
தௌத்தியமும் அனுப்பினேன் அதன்
தௌற்பல்லியம் அறிந்தால் நீ
தௌரிதமாய் எனை அணைத்திடு

- ©️ Sulo -
- 12/07/2022 -

Want your establishment to be the top-listed Arts & Entertainment in Colombo?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Colombo