Metro Mirror
Registered as News Website Under Ministry of Media HOT & Fast Media Network in Sri Lanka
08/07/2026
கல்வி வணிகமயமாக்கலைத் தடுக்க இலவச கருத்தரங்குகள் நடத்த வேண்டும் – சம்மாந்துறை பிரதேச சபையில் உறுப்பினர் றிஸ்விகான் வலியுறுத்தல்.!
( ஜீ + மின்மினி மின்ஹா)
சம்மாந்துறை பிரதேச சபையின் 5வது கூட்டத்தொடரின் 13வது அமர்வு நேற்று (07) தவிசாளர் - கௌரவ. ஐ.எல்.எம். மாஹிர் தலைமையில் நடைபெற்றது. இதன்போது பிரேரணையொன்றை முன்வைத்து உரையாற்றிய சபை உறுப்பினர் எம்.ஐ.எம். றிஸ்விகான் (ACMC), மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக தேர்வுக் காலங்களுக்கு முன்னதாக இலவச கல்வி கருத்தரங்குகள் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
தேர்வுகளை வெற்றிகரமாக எதிர்கொள்ள மாணவர்களுக்கு வழிகாட்டும் நோக்கில் தாம் கல்வி கருத்தரங்குகளை நடத்தி வருவதாகக் குறிப்பிட்ட அவர், தற்போது கல்வித்துறை வணிகமயமாகி வருவது கவலைக்குரிய நிலையாக மாறியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
சில பாடசாலைகளில் கல்வித் தரத்தை உயர்த்துவதாகக் கூறி மாணவர்களிடமிருந்து அதிகளவு பணம் அறவிடப்படுவதாகவும், இதனால் பல பெற்றோர் பொருளாதார ரீதியாக சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு அறவிடப்படும் கட்டணங்களுக்கான நியாயமான விளக்கங்கள் பல இடங்களில் வழங்கப்படுவதில்லை என்றும் அவர் கூறினார்.
எனவே கல்வியை வணிக நோக்கில் முன்னெடுக்கும் நடைமுறைகளை தவிர்த்து, அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வி வாய்ப்புகளை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
மேலும், சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் ஒவ்வொரு தேர்வுக் காலத்திற்கும் முன்னதாக குறைந்தபட்சம் ஒரு இலவச கல்வி கருத்தரங்கையாவது நடத்துவதற்கான தீர்மானத்தையும் முன்வைத்தார்.
இதேவேளை, மற்றுமொரு பிரேரணையையும் முன்வைத்து உரையாற்றிய அவர், சம்மாந்துறை ஆலையடி வட்டைப் பகுதியில் காணி ஒதுக்கீடு தொடர்பாக நிலவும் சவால்களையும் சபையின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.
அப்பகுதியில் சுமார் 18 ஏக்கர் காணி காணப்படுவதாகவும், அதில் 12 ஏக்கர் விளையாட்டு மைதானத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பாடசாலைகள், அரச கட்டிடங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பொதுத் தேவைகளுக்காக காணி ஒதுக்குவதில் தற்போது போதிய நிலப்பரப்பு இல்லாததால் பல சிக்கல்கள் உருவாகி வருவதாகவும் குறிப்பிட்டார்.
குறிப்பாக சம்மாந்துறை ஜவாலியா பாடசாலைக்காக காணி ஒதுக்கப்பட்ட போது எதிர்கொண்ட அனுபவங்களை எடுத்துக்காட்டிய அவர், காணி வழங்கும் தற்போதைய நடைமுறையை மறுபரிசீலனை செய்து, தேவையெனில் மாற்றுப் பெறுமதிகளை வழங்கும் முறை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்தார்.
புனித அல்குர்ஆன்; பொறுப்புக்கூற வேண்டிய அமைச்சு உடனடியாக தலையிட்டு விடுவியுங்கள்.!
புனித அல்குர்ஆன் பிரதிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக சுங்கத்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டிருப்பது, எங்களின் மதச் சுதந்திரம் மற்றும் ஆன்மீக உரிமை தொடர்பில் கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பொறுப்புக்கூற வேண்டிய அமைச்சு உடனடியாக தலையிட்டு, இந்த தாமதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, புனித அல்குர்ஆன் பிரதிகளை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
👉கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் எம்.பி கோரிக்கை.!
-- ஊடகப்பிரிவு
08/07/2026
'இலங்கை பைத்துல்மால் நிதியம்" அமைப்பதற்கான ஹிஸ்புல்லாஹ் எம்.பியின் தனிநபர் பிரேரணை வெள்ளிக்கிழமை விவாதத்திற்கு.!
பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தனிநபர் பிரேரணை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
முஸ்லிம் சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் "இலங்கை பைத்துல்மால் நிதியம்" என்ற பெயரில் புதிய நிதியமொன்றை நிறுவுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியே இப்பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களின் கல்வி, கலாசாரம், தொழில் வாய்ப்புகள், சமூகப் பொருளாதார முன்னேற்றம், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் அன்றாட வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கென அர்ப்பணிக்கப்பட்ட தனித்துவமான நிதியமொன்று தற்போது முஸ்லிம் சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் இல்லாதிருப்பதை இப்பிரேரணை சுட்டிக்காட்டுகிறது.
மேலும், இத்தகைய சமூக மற்றும் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில், உலகின் பல முஸ்லிம் நாடுகளிலும், முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் பல்வேறு நாடுகளிலும் "பைத்துல்மால்" நிதியங்கள் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வருவதாகவும், அவை சமூக நலனில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருவதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தனது பிரேரணையில் எடுத்துரைத்துள்ளார்.
இலங்கையிலும் இவ்வாறான உத்தியோகபூர்வ நிதியமொன்று நிறுவப்பட்டால், அதற்குத் தேவையான நிதி ஆதாரங்களை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழும் தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்களிடமிருந்து எளிதில் திரட்ட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, மேற்கண்ட நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, முஸ்லிம் சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் "இலங்கை பைத்துல்மால் நிதியம்" என்ற பெயரில் புதிய நிதியமொன்றை நிறுவுவதற்கான உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அவரின் தனிநபர் பிரேரணையில் விரிவாகக் கோரப்பட்டுள்ளது.
-- ஊடகப்பிரிவு
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Dehiwala